×

ஹெட்டிங்லே டெஸ்ட் தோள்பட்டை காயம்: மார்க் உட் விலகல்

லண்டன்: இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட், தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, ஹெட்டிங்லேயில் நடைபெறவுள்ள இந்திய அணிக்கு எதிரன 3வது டெஸ்ட் போட்டியில் ஆட மாட்டார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. லார்ட்சில் நடந்த இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், ஃபீல்டிங்கில் டைவ் அடித்து பந்தை  தடுக்க முயன்ற போது, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட்டின் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் காயத்தை பொருட்படுத்தாமல் 2வது இன்னிங்சில் சிறப்பாக பந்து வீசி, இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் ராகுல், ரோஹித் மற்றும் புஜாரா ஆகியோரின்  விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார்.

அந்தப் போட்டியில் அவர் முதல் இன்னிங்சில் 2 விக்கெட் வீழ்த்தியிருந்தார். தற்போது தோள்பட்டை காயத்துக்கு அவர் சிகிச்சை எடுத்து வருவதால், ஹெட்டிங்லேயில் வரும் 25ம் தேதி துவங்கவுள்ள இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அவர் ஆட மாட்டார் என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் உட் கூறியுள்ளார். இது குறித்து கிறிஸ் சில்வர் உட் கூறுகையில், ‘‘மார்க் உட் தற்போது சிகிச்சையில் உள்ளார். ஹெட்டிங்லே டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பது குறித்து, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.  தற்போதுள்ள நிலையில் அவர் ஹெட்டிங்லே டெஸ்ட்டில் ஆடுவது சந்தேகம்தான்’’ என்று தெரிவித்துள்ளார்.  

இங்கிலாந்து அணியில் ஏற்கனவே காயம் காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இடம் பெறவில்லை. பென் ஸ்டோக்சும் மன அழுத்தம் காரணமாக போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் மார்க் உட் காயமடைந்துள்ளது, இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்பினால் வரவேற்போம்
பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் உட் மேலும் கூறுகையில், ‘‘இங்கிலாந்தின் பேட்டிங் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. பேர்ஸ்டோ, ரோரி பர்ன்ஸ் டொமினிக் சிப்லி பார்மில் இல்லை, ஹசீப் ஹமீத் கவனம் ஈர்க்க முடியவில்லை. பார்ட்னர் ஷிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவின் சிறந்த பந்துவீச்சு எதிராக முதல் இன்னிங்சில் 390 ரன் எடுத்ததை மறந்து விடக்கூடாது. பார்ட்னர்ஷிப் அமைந்தால் பெரிய ரன்னை எடுக்கலாம். பென் ஸ்டோக்ஸ் மனநிலை இடைவெளியில் இருந்து திரும்பும் படி வலியுறுத்தவில்லை. ஆனால் அவர் அணிக்கு திரும்புவது நல்லது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்கு கால வரம்பு இல்லை. அவர் மீண்டும் உள்ளே வரத் தயாராக இருக்கும் போது, ​நாங்கள் அவரை இரு கைகளையும் கூப்பி வரவேற்போம்’’, என்றார்.

Tags : Headingley Test Shoulder Injury: Mark Wood Dislocation
× RELATED உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தமிழ்நாடு வீரர் சாதனை!